தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

நூலகம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நூலகம் 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்நூலகம் 12,362 புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மாசு, காற்று மாசு, வாகன மாசு, கழிவுநீர் சுத்திகரிப்பு, நகர திடக்கழிவு மேலாண்மை, ஒலி மாசு, கடல் மாசு, தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை, மருத்துவ கழிவு மேலாண்மை, தொழிற்சாலை மாசு, சுற்றுச்சூழல் பொறியியல், பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் இரசாயன தொழில்நுட்பம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆரோக்கியம், பூச்சிக்கொல்லி, உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நலம், சுற்றுச்சூழல் கல்வி, காடுகள், நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் சட்டங்கள், மண், சக்தி, பெண்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை, மாசு கட்டுப்பாடு வாரிய அறிவிக்கைகள் போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் டியூவி இலக்க வகைப்பாடு முறைப்படி வகைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட 10 (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இதழ்கள், 16 செய்தித்தாள்கள், 10 வார / மாத புத்தகங்கள் தருவிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள், செய்தி வெளியீடுகள், இதழ்கள் மற்றும் அறிவிக்கைகள் பெறப்படுகின்றன. வருடம் வாரியாக இதழ்கள் கோர்க்கப்பட்டு நூலக உபயோகிப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை விரைவில் கண்டறியும் வகையில் முறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. நூலகம் வாரிய உயர் அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை ஆகியவற்றின் பேராசிரியர்களை உள்ளடக்கிய நூலகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் குறித்த விவரங்கள் சேகரிப்போர் இந்த நூலகத்தில் உறுப்பினராகலாம். உபயோகிப்பாளர்கள் நகல் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உறுப்பினர் சந்தா:

  • மாணவர்கள்: மாதம் - ரூ. 30.00
  • வருடம் ரூ.75.00
  • தனி நபர்: வருடம் ரூ. 100.00

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பணியிலிருப்போர், தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றோர் நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்கள் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வாசகர்கள் வந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். 2018-2019ஆம் ஆண்டில், சுமார் 672 பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மாணவர்களும் நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர்.