தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் பங்கேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

சுற்றுச்சூழலின் தன்மை மற்றும் அதன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதே சுற்றுச்சூழல் விழிப்புணர்வாகும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவித்தல் என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு எளிய வழியாகும், மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி என்பது வரும் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பல்வேறு மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகளை திறம்பட கடைப்பிடிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. மிகப் பெரிய அளவிலான ஈடுபாடு மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மிகவும் சிறந்த முறையில் செயல்படுத்தி, சுற்றுச்சூழல் இயக்கங்களை வலுப்படுத்த இயலும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பின்வரும் விழாக் காலங்களில் வாரியத்தால் நடத்தப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டு, விழாக் காலங்களில் வாரியத்தால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

விநாயகர் சதுர்த்தி

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விநாயகர் சிலைகள் செய்ய பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் இரசாயன வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட தலைநகரம் மற்றும் பிற நகரங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிலைகள் செய்வதற்கு பாரம்பரியமான முறையில் களிமண்ணைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டது. சிலைகளை கரைக்கும் முன் பூஜை பொருட்கள், பூக்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை அகற்றுமாறும் மறுசுழற்சி, உரம் தயாரிப்பதற்காக, உயிரி-சிதைவு பொருட்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட வேண்டும் எனவும், மக்காத பொருட்களை சுகாதாரத்துடன் நிறுவப்பட்ட குப்பை கிடங்குகளில் அப்புறப்படுத்தி தனியாக சேகரிக்க வேண்டும் எனவும், மேலும், மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிலைகளை கரைப்பதற்கு முன்னும் பின்னும் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளின் நீரின் தரத்தை வாரியம் கண்காணித்தது. தமிழக அரசு வெளியிட்ட 30.08.2021 தேதியிட்ட அரசாணை எண்.765 இல், சிலைகளை பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைப்பதையும் நிகழ்ச்சிகள் நடத்துவதையும் கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், சில வழிகாட்டுதல்களுடன் 15.09.2021 வரை தனிப்பட்ட குடும்பங்களால் மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது ஒலி மற்றும் புகை மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுமாறு மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரியத்தால் நடத்தப்படுகிறது. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நீதிப்பேராணை மனு எண். 728/2015 இல் அளித்த தனது 23.10.2018 தேதியிட்ட தீர்ப்பில், குறைவான உமிழ்வு கொண்ட பட்டாசுகள் (மேம்படுத்தப்பட்ட பட்டாசுகள்) மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்படும் என்று இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலம் பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், மாண்புமிகு நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் வரை கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி, தீபாவளியன்று (04.09.2021) காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையும், இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மாண்புமிகு உச்ச நீதிமன்றம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் தங்கள் அதிகார எல்லையில் உள்ள நகரங்களில் 14 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தீபாவளிக்குப் பிறகு 7 நாட்கள் வரை) குறுகிய கால சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டும், 14 நாட்களுக்கான கண்காணிப்பு வாரியத்தால் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் சங்கங்கள், தேசிய பசுமைப்படை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் காவல் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கும் மொத்தம் ரூ.6.5 லட்சம் (ரூபா ஆறு லட்சத்து ஐம்பதாயிரம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 01.11.2021 முதல் 04.11.2021 வரை நான்கு நாட்களுக்கு சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 9 நகரங்களில் ஹலோ எஃப்எம் ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போகி பண்டிகை

ஜனவரி மாதம் போகி பண்டிகையின் போது, கழிவுப் பொருள்களான டயர்கள், டியூப்கள், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள் போன்ற கழிவுப்பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து வாரியத்தால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 11.01.2022 முதல் 12.01.2022 வரை இரண்டு நாட்களுக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 9 நகரங்களில் ஹலோ எஃப்எம் ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போகி பண்டிகை தினத்தன்று, சென்னையில் டயர்கள், டியூப்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தடுக்கும் வகையில், வாரிய அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சென்னை மாநகரில் கத்திவாக்கம், மணலி, தில்லை நகர் (கொளத்தூர்), தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.கா.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், பெசன்ட் நகர், தியாகராய நகர், பெருங்குடி, காரம்பாக்கம், மீனம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 இடங்களில் போகி மற்றும் போகி தினத்திற்கு முந்தைய நாள் சுற்றுப்புற காற்றின் தர ஆய்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இதன் ஆய்வறிக்கை வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகள் இணைப்பு-8B கொடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் பங்கேற்பு
மாசில்லா பசுமைப்பயணம் திட்டத்தினை (ECOmmute School) சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் கௌரவிக்கும் திட்டம்

வளிமண்டலத்தில் ஏற்படும் காற்று மாசு, உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. முக்கியமாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையினால் காற்று மாசு அதிகமாக ஏற்படுகின்றது. பெரு நகரங்களில் அதிக அளவிலான மோட்டார் வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அதிக ஒலி மாசு ஏற்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 2021-ல் மாசற்ற அலுவலக வாரம் – பயண நாள் (Weekly Pollution Free Office Commute Day-ECOmmute Day) என்ற பசுமை பயண திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று வாரியத்தின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தனி நபர் மோட்டார் வாகனங்களை தவிர்த்து நடைபயணம், சைக்கிள், மின் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து மூலம் அலுவலகம் வந்து செல்ல வேண்டும். அதன்படி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வாரியத்தின் இந்த சிறந்த முயற்சியினை தொடர்ந்து பல மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் மாவட்ட அலுவலகங்களில் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். வாரியம் கேட்டுக்கொண்டதன்படி பல தொழிற்சாலைகள் பசுமை பயணத்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. மேலும் இலட்சத்தீப் அரசு நிர்வாகமும் இதனை அமல்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அதற்கான அடையாள குறியீடு (Logo) வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில் மாசில்லா பசுமைப்பயணம் (Ecommute School) திட்டத்தினை கடந்த நவம்பர் 2021-ல் வாரியம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின்படி உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு தங்களது பெற்றோர்கள் மூலம் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்து செல்வதை தவிர்த்து நடைபயணம், சைக்கிள், மின் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தினை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகரில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளிடையே இதத்திட்டத்தினைசெயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும், அதாவது 90% எண்ணிக்கை மேல் மாணவர்கள் நடைபயணம், சைக்கிள், அல்லது பொது போக்குவரத்து மூலம் பள்ளிக்கு வந்து செல்லும் பள்ளிகளை தேர்வு செய்து அப்பள்ளிகளுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் ‘ECOmmmute’ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அதில் முதன்மையாக உள்ள 20 பள்ளிகள் (10 அரசு பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள்) தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளுக்கு தலா ரூ.25,000/- மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. (பங்கு கொண்டோ சதவிகிதம் = பசுமை பயணத்தில் பங்கு கொண்ட மாணவர்கள் ÷ மொத்த வகுப்பு மாணவர்கள்)

இது தொடர்பாக வாரியம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியது. இத்திட்டத்தில் பங்கு கொள்வது கட்டாயம் இல்லை எனவும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் தாமாக முன்வந்து பங்குகொள்ள ஊக்குவிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வாரியம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியது.

இத்திட்டத்தில் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்காக மென் பொருள் வசதியினை வாரியம் ஏற்படுத்தி கொடுத்தது. இதில் பதிவு செய்வது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 242 பள்ளிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்கள்.

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் மொத்தம் 99 பள்ளிகள் பங்குகொண்டன. இப்பள்ளிகளில் பயிலும் மொத்தம் 24627 மாணவர்கள் பசுமை பயணத்தின் மூலம் பள்ளி வந்து சென்றார்கள். இதில் 37 பள்ளிகளில் 90% மேல் (மொத்தம் 6373) மாணவ மாணவியர்கள் பசுமைப் பயணத்தின் மூலம் பள்ளி வந்து சென்றார்கள். இந்த 37 பள்ளிகளில் 21 பள்ளிகள் அரசு பள்ளிகள் மற்றும் 16 பள்ளிகள் அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகள் ஆகும்.

21.5.2022 அன்று சென்னையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அக்கருத்தரங்கு துவக்க விழாவில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மாண்புமிகு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். பசுமை பயணத்திட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் பசுமை பயணத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய முதல் ஆறு பள்ளிகள் (3 அரசு பள்ளிகள்+3 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு மத்திய அமைச்சர் மூலம் ‘ECOmmute School’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் 5.6.2022 அன்று தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டியில் நடைபெற உள்ள உலக சுற்றுச்சூழல் தின விழாவில், மீதம் உள்ள 31 பள்ளிகளுக்கு ‘ECOmmute School’ சான்றிதழ்களும், அதில் சிறப்பாக விளங்கிய 20 பள்ளிகளுக்கு தலா ரூ.25,000/- மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ வீ.மெய்யநாதன் அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. “Friend of Environment” சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது 2021

தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருதுகளை வழங்குகின்றன. விருதுக்காக ஒவ்வொரு ஆண்டும் 100 நபர்கள்/நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு விருதுக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய புதுமையான பசுமை தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்/பசுமை தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, கட்டுப்பாடு மற்றும் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவற்றிற்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கிய அமைப்பு / கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லூரிகள் / குடியிருப்பு நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளூர் அமைப்புகள்/தொழில்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது 05.06.2022 அன்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து 85 பரிந்துரைகளைப் பெற்றது. அதனை பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட 85 விருது பெற்றவர்களுக்கு பசுமை சாம்பியன் விருதுகள் 05.06.2022 அன்று வழங்கப்பட்டன.