அபாயகரமான கழிவுகள்

>>   மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன் கீழ் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, இவ்விதிகளின் படி இயற்பியல், இரசாயண, உயிரியியல் காரணங்களால் எதிர்வினை நச்சுகளை ஏற்படுத்தக்கூடிய, எரியக்கூடிய, வெடிக்கும் அல்லது அரிக்கும் தன்மை கொண்ட சுகாதாரம் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு கழிவும் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் என்று கருதப்படுகின்றன. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்வோர், அக்கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்தல், குறைத்தல், மறு உபயோகம் செய்தல், மறு சுழற்சி செய்தல், மீளப்பெறுதல், இணை செயலாக்கத்திற்கு பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற வழிமுறைகளை கையாளவேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது

 தமிழ்நாட்டில் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்யும் 4199 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகாரம் (Authorisation) வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 7.9 லட்சம் டன் தீங்கிழைக்கும் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டு இதில் 0.82 லட்சம் டன் நிலம் நிரப்பவும், 1.23 லட்சம் டன் மறுசுழற்சிக்காகவும், 5.75 லட்சம் டன் மறுஉபயோகத்திற்கும் மற்றும் 0.09 லட்சம் டன் புகை இல்லா எரிப்பதற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களைச் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி விஞ்ஞான முறையில் பாதுகாப்பாக கையாளுவதற்கு தகுந்த மேலாண்மை நடவடிக்கையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்து வருகிறது

 துணி சாயமிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உருவாகும் தீங்கு விளைவிக்கும் திடக்கழிவினை சிமெண்ட் தொழிற்சாலைகளில் மூலப் பொருளாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரையில் 1.68 இலட்சம் டன் கழிவுகள் இவ்வழயில் பயன்படுத்தப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் கழிவுகள் மறு உபயோகத்திற்காக சிமெண்ட் ஆலை எரிபொருளாக தயார்படுத்தும் இரண்டு நிறுவனங்கள் இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக நிலத்தில் சேகரித்து வைக்கும்படியான பொது வசதிகள் (Treatment, Storage and Disposal Facilities). கும்மிடிபூண்டி மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு இடங்களில் இயக்கத்தில் உள்ளன.

footer images