தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றி:-
>> தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 27.02.1982 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. சென்னையை தலைமையகமாக கொண்டு வாரியத்தின் 8 மண்டல அலுவலகங்கள்,38 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 3 உதவி சுற்றுச்சூழல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரிய தலைவரின் தலைமையில் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மண்டல அலுவலகங்கள் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும், மாவட்ட அலுவலகங்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன, உதவி சுற்றுச்சூழல் அலுவலகங்கள் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் 5 சுற்றுச்சூழல் பொறியளார்கள் தலைமையில் சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் வேலூரில் பறக்கும் படைகளும் செயல்பட்டு வருகின்றன.
- நீர் (மாசுபாட்டைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும்) சட்டம், 1974
- தமிழ்நாடு நீர் (மாசுபாட்டைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும்) விதிகள், 1983
- காற்று (மாசுபாட்டைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும்) சட்டம், 1981
- தமிழ்நாடு காற்று (மாசுபாட்டைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும்) விதிகள், 1983
- சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986
- சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், 1986
- உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஆபத்தான வேதியியல் பொருட்கள் இறக்குமதி விதிகள், 1989
- சாம்பல் பயன்பாட்டுக்கான அறிவிப்பு, 1999
- பேட்டரிகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 2001
- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு, 2006
- ஆபத்தான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் இடம்பெயர்ந்த நகர்வு) விதிகள், 2016
- உயிரியல்-மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016
- திட கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016
- பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016
- மின் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016
- கட்டிடம் மற்றும் இடிந்து போன கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016
>> தொழிற்சாலைகளைக் கண்காணிக்க உதவும் வகையில் வாரியத்தில் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும், 8 மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.
>> தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாசு கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிகளை முறையாக செயல்படுத்தி வருகிறது. வெளியேற்றப்படும் நீர், காற்று மற்றும் நில மாசுக்களின் தன்மையை வாரியம் சேகரித்து, கண்டறிந்து தரவுகளை வெளியிடுகிறது. மேலும் வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் காற்று மாசின் தரத்தை அறிய முறையான தர அளவுகளை நிர்ணயத்துள்ளது.
>> வாரியம் தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டமாக இசைவாணைகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவாணை, தகுந்த இடத் தேர்வுக்கு பின், கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கு முன் வழங்கப்படுகிறது. பிறகு வாரியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு சாதனங்களை தொழிற்சாலை அமைத்த பின், உற்பத்தியை தொடங்கும் முன் தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை இரண்டாவது கட்டமாக வழங்கப்படுகிறது.
