மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 23.12.2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்க தொடக்க விழாவில் ஆற்றிய உரை

"மீண்டும் மஞ்சப்பை" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன். மஞ்சள் பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசேசமா? பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்ட காலம் ஒன்று உண்டு.

அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம் – மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது.

மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும் – தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழகான – விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது.

அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு – சுற்றுச்சூழலுக்கு சரியானது – அழகான - நாகரிகமான – பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆகும்.

இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ – அந்தளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவது.

வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பிறந்தநாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பிரச்சனைதான் மானுடத்தின் மாபெரும் பிரச்சனை என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன்.

அந்த சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும்.

இப்போது இந்த மஞ்சள் பை இருக்கிறது. பருத்தி செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. அதில் இருந்து பருத்தி நூலை துணியாக நெய்கிறோம். பை தைக்கிறோம். அந்த பை கிழிந்தது என்றால் அதனை கரித்துணியாக - மிதியடியாக வீட்டில் பயன்படுத்துகிறோம். அதுவும் சிக்கனத்துக்குப் பெயர்போன நமது பெண்கள் அதை முழுமையாக பயன்படுத்துவார்கள். அதன்பிறகு அது மக்கிவிடும். ஆனால், பிளாஸ்டிக் மக்காது. அதுதான் சுற்றுச்சூழலை கெடுக்கிறது. மேலும்